
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் 38 மணல் வாஷிங் பிளாண்ட்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நான்காவது முறையாகச் சந்தித்து அவர்கள் புகார் மனு அளித்தனர். காவிரி நீர் ஆதார சங்கத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில்தான் அதிகாரிகள் ஆதரவுடன் 38 இடங்களில் அனுமதி இல்லாத கிராவல் மண் மற்றும் மணல் கொள்ளை நடைபெறுகிறது,” என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், அரசு அனுமதி இல்லாத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சட்டவிரோதமான மணல் வாஷிங் பிளாண்ட்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் ஜெயபால் தெரிவித்தார். தமிழகத்தில் மண் அலசி மணலாக்குவதற்கு அனுமதி இல்லை. ஆனாலும், இங்கு விவசாய நிலங்கள், ஆறு மற்றும் குளங்களில் இருந்து கிராவல் மண் அள்ளப்பட்டு, இயந்திரங்கள் மூலம் மணலாக மாற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றிவிட்டதாக அவர் கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இதுவரை மூன்று முறை புகார் மனு அளித்திருப்பதாகவும், தற்போது நான்காவது முறையாகப் புகார் அளிக்க வந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். சட்டவிரோதமாகச் செயல்படும் 38 இடங்களையும் GPS கருவி மூலம் புகைப்படம் எடுத்து, அதையும் ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வந்திருப்பதாக அவர்கள் கூறினர். “மாவட்ட ஆட்சியர் எங்களைச் சந்திக்க மறுத்துவருகிறார். இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று பார்ப்போம். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்,” என்று ஜெயபால் எச்சரித்தார்.