‘‘ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அந்த நேரத்தில், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த திருமாவளவன், ‘‘கவின் தந்தை சந்திரசேகரின் கோரிக்கைகளை முதல்வரிடம் வலியுறுத்தி வைத்தேன். கவின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். சம்பவத்துக்கு தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினரும் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது. எந்த குற்றவாளியும் தப்பிச் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்’’ என்றார்.
மேலும், ‘‘இந்த சந்திப்பில் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் குறித்து விவாதிக்கவில்லை. அது ஒரு அரசியல் கோரிக்கை. இப்போதைக்கு கவின் குடும்பத்தினர் வைத்த கோரிக்கைகள் பற்றியே பேசியுள்ளோம். எனினும், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம். தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம். இதற்காக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம்’’ எனவும் திருமாவளவன் கூறினார்.