மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன்(55). மயிலாடுதுறை, தரங்கம்பாடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினரான இவர் ஆறுகளில் விசுறு வலை வீசி மீன்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரைப் போன்று இப்பகுதியில் 25 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜெயராமன் மட்டும் தனியாக சென்று சித்தமல்லி அருகே திம்மாபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி இடுப்பளவு ஆழத்தில் விசுறு வலை வீசி மீன் பிடித்துள்ளார். அப்போது, ஆற்றில் சென்ற முதலை ஜெயராமனின் வலது கையை கடித்தது. இதில், படுகாயம் அடைந்த ஜெயராமன் முதலையிடம் இருந்து தப்பித்து கரையேறினார். அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவருக்கு கையில் 7 இடங்களில் தையல் இடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து மணல்மேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
