சென்னை :
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரம், துரைராஜ் நகரில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லத்தில் இன்று அதிகாலை 6 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலா ஆகியோரிடம் மூன்று மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது.
மேலும், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில், அமைச்சர் பெரியசாமியின் மகனும் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும், அவரது சகோதரி இந்திராணி வசிக்கும் வள்ளலார் நகரிலுள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அதேபோல், பட்டிவீரன்பட்டியில் அமைச்சரின் சொந்தமான இருளப்பன் மற்றும் கெய்னி நூற்பாலைகளிலும் சோதனைகள் நடைபெற்றன. இதற்காக 10 வாகனங்களில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 30 மத்திய பாதுகாப்பு படையினருடன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், செந்தில்குமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றபோது, சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அவரது அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.