உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 50க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காசி மலைப்பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் கிர் கங்கா ஆற்றின் கரையோரப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக, இன்று பிற்பகலில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளநீர் சேரும், சகதியுமாக மலை உச்சியில் இருந்து கீழ்நோக்கி சீறிப்பாய்ந்ததில். ஆற்றின் கரையோரம் இருந்த தாராலி என்ற கிராமம் சின்னபின்னமானது. ஹோட்டல்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், வீடுகள் என அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மண்ணோடி மண்ணாகின.
இந்தியா- திபெத் எல்லை அருகே நிகழ்ந்த இந்த கோரச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தை அறிந்தவுடன், உத்தரகாண்ட் மாநில மீட்புக் குழுவினருடன், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும். இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரும், தாரலி கிராமத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்ததாகவும், அவர்களைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கவலை தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே உத்தரகாண்ட் மாநிலம் சுகிடாப் பகுதியில் இரண்டாவதாக ஒரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியிலும் பலத்த வேகத்துடன் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.