புதுடில்லி : டில்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் நகை பறிக்கப்பட்டது. சுமார் 4 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக தெரிய வருகிறது.
மழைக்கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதிலுள்ள எம்.பி.க்கள் டில்லியில் தங்கி இருக்கின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை எம்.பி. சுதாவும் டில்லியில் தங்கியிருந்து தனது பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இன்று (ஆகஸ்ட் 4) காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சுதாவிடம், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.பி. ஒருவரிடம் நேரடியாக நகை பறிப்பு நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு விஷயங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பாராளுமன்ற வளாகம் அருகே நிகழ்ந்த சம்பவமென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.