ராஜஸ்தான் :
ராஜஸ்தான் மாநிலத்தின் சிக்கர் மாவட்டம் டான்டா நகரில், 9 வயது சிறுமி ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டான்டாவில் உள்ள ஒரு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த பிராச்சி குமாவத் என்ற சிறுமி, கடந்த 15ஆம் தேதி வழக்கம்போலவே பள்ளிக்கு சென்றிருந்தார். காலை முழுவதும் ஆரோக்கியமாக இருந்த சிறுமி, மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்தபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரியர்கள், பிராச்சியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிறுமி உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமிக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. இது மிக அரிதானதாகும் எனும் கருத்தை டாக்டர் சுபாஷ் வர்மா தெரிவித்தார். மேலும், “குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது அபூர்வம். இது பிறவியிலிருந்தே இருந்த இதயக் குறைபாடாக இருக்க வாய்ப்புண்டு. பெற்றோர் முன்கூட்டியே இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.
சிறுமியின் திடீர் மரணம் அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.