நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் துவங்கிய நிலையில், ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த JN.1 வகை வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது NB.1.8.1 எனும் புதிய வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொற்றுகள் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் இருந்த அவருக்கு, மே 13 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், மே 17 ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்ததாவது :
“முதியவருக்கு பல உடல் பிரச்சினைகள் இருந்தன. எனவே அவரின் மரணத்துக்கு கொரோனா மட்டுமே காரணம் என உறுதியாகக் கூற முடியாது,” என்றார்.
மேலும், “மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா பரவல் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், பொதுநலன் கருதி மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மாநிலம் முழுவதும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,” எனவும் அவர் கூறினார்.