8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரியை மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு !

நெல்லை : நெல்லை அருகே திடியூரில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என். கல்லூரியில் படிக்கும் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறை அந்த கல்லூரியை மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் திடீர் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வீட்டு அனுமதியாக அனுப்பப்பட்டனர்.

சுகாதாரத்துறை ஆய்வில், பி.எஸ்.என். குழுமத்தைச் சேர்ந்த 5 கல்லூரிகளில் நீர் தரம் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வில், தாமிரபரணி வெள்ள நீர்க் கால்வாயில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து, சுத்திகரிப்பு செய்யாமல் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது. இந்த நீரில் விலங்குகள், எலிகள் மற்றும் சிறுநீர் கலந்திருந்ததால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை, பொதுச் சுகாதாரச் சட்டத்தின் ஆறு பிரிவுகளை மேற்கொண்டு கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள நீர் தொட்டிகள், கொள்கலன்கள், சமையல் அறை மற்றும் உணவுக்கடைகள் ஆகியவற்றை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

முறையான சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாவிட்டால், நீதிமன்ற வழியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரவல் ஏற்பட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு மட்டுமே கல்லூரி திறக்கப்படும்.

Exit mobile version