புதுடில்லி : தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, தென்கிழக்கு டில்லியின் ஜெய்த்பூர் ஹரிநகர் பகுதியில் கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
போலீஸ் தெரிவித்த தகவலின்படி, அப்பகுதியில் உள்ள பழமையான கோவிலின் சுவர், அருகிலிருந்த குடிசை வீடுகளின் மீது இடிந்து விழுந்தது. சம்பவ நேரத்தில், குடிசையில் இருந்த 8 பேர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மீட்புப் பணியாளர்கள் அவர்களை வெளியே கொண்டு வந்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், ஷபிபுல் (30), ரபிபுல் (30), முட்டு அலி (45), ரூபினா (25), டோலி (25), ருக்சானா (6), ஹசனா (7) ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகள் அனைவரும் இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக பழைய கட்டிடங்களின் நிலையை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.