பெரியபாளையம் அருகே ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 6 பெண்கள் காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகில் அரியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்களை கோவில் நிர்வாகம் அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதால் அந்த இடத்தில் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜனை நேரில் சந்தித்து மனு அளித்துவிட்டு ஷேர் ஆட்டோவில் வீட்டிற்கு பெரியபாளையம் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியாக அரியப்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது செங்குன்றத்தில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்து ஷேர் ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த அரியப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விமலா (வ/55), சாந்தி (வ/50),. மகேஸ்வரி (வ/45), கோமளா (வ/50), விஜயா(வ/55), தனலட்சுமி (வ/40). உள்ளிட்ட 6 பெண்கள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த அனைவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்த காய்கறி வியாபார பெண்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்














