மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, தற்போது தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அளவில் ஒரு பெரும் அரசியலமைப்புச் சட்ட விவாதமாக மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததோடு மட்டுமல்லாமல், தீர்ப்பு வழங்கிய நீதியரசரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தி’ கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.பி.க்கள் மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர். ஒரு நீதிபதியின் தீர்ப்பு அரசியல் விருப்பங்களுக்கு மாறாக இருக்கிறது என்பதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யத் துணியும் இந்த நடவடிக்கை, இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் எனப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், எம்.பி.க்களின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் உள்ளிட்ட மொத்தம் 56 நீதிபதிகள் ஒருங்கிணைந்த கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்திற்கு ஒத்துப்போகாத நீதிபதிகளை அச்சுறுத்தும் இந்த முயற்சி ‘வெட்கக்கேடானது’ என அவர்கள் சாடியுள்ளனர். இத்தகைய பதவி நீக்கத் தீர்மானங்கள் தொடர அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் வேர்களையும், நீதித்துறையின் தன்னாட்சியையும் முழுமையாக அழித்துவிடும் என அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மேனாள் நீதிபதிகள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், எம்.பி.க்கள் முன்வைத்துள்ள காரணங்கள் மிகவும் மேலோட்டமானவை என்றும், பதவி நீக்கம் போன்ற ஒரு தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கைக்கு இவை எவ்வகையிலும் தகுதியற்றவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “நெருக்கடி நிலைக் காலத்தில்கூட, அப்போதைய அரசு எல்லை மீற மறுத்த நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யத் துணியவில்லை” என்பதை நினைவுபடுத்தியுள்ள அவர்கள், நீதிபதிகளைத் தங்கள் அரசியல் விருப்பங்களுக்கு இணங்க வைப்பதற்காகப் பதவி நீக்கம் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்தையே மிரட்டும் செயலாகும் என்று தெரிவித்துள்ளனர். அரசியல் பழிவாங்கும் நோக்கில் நீதித்துறையை முடக்க நினைக்கும் இத்தகைய அணுகுமுறைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் நீதித்துறை வல்லுநர்கள் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்குத் தங்களது ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.

















