ஜம்மு காஷ்மீரில் மழையால் 4 பேர் பலி : வீடுகள் இடிந்து சாலைகள் துண்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மழை பேரழிவில் 4 பேர் உயிரிழந்ததோடு, 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

தொடர்ச்சியான மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மேக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி, சாலைகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை மீறிச் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேக வெடிப்பு – வீடுகள் சேதம்

இன்று தோடா மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் அச்சத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பாலம் இடிந்து சிக்கிய வாகனங்கள்

ஜம்முவின் பகவதி நகர் பகுதியில் உள்ள பாலம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தில் சிக்கியிருந்த பல கார்கள் சேதமடைந்தன. அவற்றில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராணுவம் மீட்பு பணியில்

ஜம்முவில் பலத்த மழையால் மக்கள் சிக்கிய பகுதிகளில், இந்திய ராணுவம் களமிறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக காடிகர் பகுதியில் படையினர் நேரடியாக சென்று பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

வானிலை எச்சரிக்கை

இதே நேரத்தில், கதுவா, சம்பா, தோடா, ஜம்மு, ரம்பன், கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் கூடுதல் தீவிரத்துடன் நடைபெறுகின்றன.

Exit mobile version