ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 35 தமிழக மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்றபோது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுகுறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
“தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவ சகோதரர்கள் 35 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சொந்தமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது மன வேதனையை ஏற்படுத்துகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களது படகுகளும் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீதான அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்களுக்கும் ஒன்றிய அரசு அக்கறை காட்ட வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசும் தாமதமின்றி கொடுக்க வேண்டும். மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நிரந்தர தீர்வு ஒன்றை கண்டறிய இரு அரசுகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.
