திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான திரு. ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.
பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கலா அவர்கள் விழாவில் கலந்துகொண்டவர்களை வரவேற்று, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி குறித்தும், கடந்த ஆண்டில் பல்கலைக்கழகம் செயல்படுத்திய முக்கிய திட்டங்கள் குறித்தும் விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார். குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எவ்வாறு பயன்பட்டன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்த விழாவில், பல்கலைக்கழகத்தில் பயின்ற 376 இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் நேரடியாகப் பட்டங்களை வழங்கினார். மேலும், விழாவில் கலந்துகொள்ளாத 8111 மாணவிகள் தங்களின் பட்டங்களைப் பெற உள்ளனர்.
ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கீதாஞ்சலி தாஷ் அவர்கள் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மாணவிகளிடம் காணக்கிடைக்கும் கல்விப் பாரம்பரியம், அவர்களின் குடும்பங்களின் உன்னத அர்ப்பணிப்பு, மற்றும் 21ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெண்ணின் மகத்தான பயன்படுத்தப்படாத திறன் ஆகிய மூன்று தனித்துவமான இழைகளின் ஒருங்கிணைப்பைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்தார்.
அன்னை தெரசாவின் பொன்மொழியான, “நாம் அனைவரும் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது, ஆனால் நாம் சிறிய விஷயங்களை மிகுந்த அன்புடன் செய்ய முடியும்,” என்பதைக் கல்வியின் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய சாரம்சமாக அவர் வலியுறுத்தினார்.
பேராசிரியர் கீதாஞ்சலி தாஷ் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியதாவது: “கல்வி என்பது அறிவின் குவிப்பாக மட்டுமல்ல, இரக்கம், பணிவு மற்றும் சேவையை உள்ளடக்கியதாகும். இது மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவி, தன்னம்பிக்கையை உருவாக்குகிறது, சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், கல்வி உங்களுக்குச் சமூகத்திற்கு உங்கள் பங்களிப்பைத் தேர்ந்தெடுக்கும் புத்திசாலித்தனம் மற்றும் வழிகாட்டியாக திகழ்கிறது.”
மேலும், அவர் நாட்டின் பெண் நிதி அமைச்சரான திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை முன் உதாரணமாகக் காட்டி, அவரைப் பார்த்து மாணவிகள் பொருளாதார நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த விழாவில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான திரு. கோவி. செழியன் அவர்கள் பங்கேற்பார் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் கலா, பேராசிரியர்கள், முனைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெற்ற மாணவிகளின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


















