தூய்மை பணியாளர்களுக்காக தமிழக அரசு பெரிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. பின்னர், படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் அதிகாலை நேரத்திலேயே பணியைத் தொடங்க வேண்டியிருப்பதால், வீட்டில் உணவு சமைத்து கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிதித்துறை அறிவிப்பின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் 29,455 பணியாளர்கள் பயன் பெறுவர்
சென்னை மாநகராட்சியின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வட்டாரங்களில் பணிபுரியும் மொத்தம் 29,455 தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட உள்ளது.
காலை உணவு : காலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை 166 மையங்களில் 5,159 பேருக்கு வழங்கப்படும்.
மதிய உணவு : பிற்பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை 285 இடங்களில் 22,886 பேருக்கு வழங்கப்படும்.
இரவு உணவு : இரவு 9.30 மணி முதல் 10.00 மணி வரை 1,410 பணியாளர்களுக்கு வழங்கப்படும்.
186 கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளுக்கு
இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.186 கோடி 94 லட்சம் 22,969 செலவிடப்படவுள்ளது.
மேலும், உணவுத் திட்டத்தின் செயல்திறன் மற்றும் தரத்தை கண்காணிக்க, ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகரை சென்னை மாநகராட்சி நியமிக்க உள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
