மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி சார்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மணிவிழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. ஆண், பெண் என இருபிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. பள்ளி செயலர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில் நடைபெற்ற வாலிபால் போட்டியை தருமபுரம் ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர்கள் சார்பில் 15 அணிகளும் மாணவிகள் சார்பில் 9 அணிகளும் கலந்து கொண்டு விளையாடினர்.
போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு 4000, 3000, 2000 என்று ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் லயன்ஸ் சங்கம் சார்பில் வாகனத்தில் சென்று இலவசமாக இரவு உணவு வழங்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார். இதில் லயன் சங்க தலைவர் கோபால்ராஜ், செயலாளர் ஜெகதராஜ், பொருளாளர் மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
