சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க காத்திருப்பு போராட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வானில் சென்ற 22 ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்களுக்கு கொரோனா கால ஊக்கத்தொகை வழங்க வேண்டும், பணிக்கொடை பட்டுவாடா சட்டத்தின் கீழ் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும்,தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு அனைத்து ஊழியர்களுக்குமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும், மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி இயக்குனர்கள், சுகாதார ஊக்குனர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை பனகல் மாளிகை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்மலர் தலைமையில் 22 தொழிலாளர்கள் வேனில் புறப்பட்டு சென்றனர். சீர்காழி அருகே கொள்ளிடம் நான்கு வழி சாலை சோதனை சாவடியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 22 பேரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அப்போது தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் தடுத்து நிறுத்தி கைது செய்யும் அரசின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்


















