இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 2026 மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. தொடக்க நாளிலேயே ரசிகர்களுக்கு விருந்தாக, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனின் வெற்றியின் வேகத்தை தொடரும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதே நேரத்தில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி, வலுவான தொடக்கத்துடன் தொடரை ஆரம்பிக்க தீவிரமாக தயாராகியுள்ளது. இதனால் முதல் போட்டியே கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு அறிமுகமான மகளிர் ஐபிஎல் தொடர், குறுகிய காலத்திலேயே உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களில், முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது சீசனில் ஆர்சிபி, மூன்றாவது சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றி தங்களின் ஆதிக்கத்தை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கும் நான்காவது மகளிர் பிரீமியர் லீக் தொடர், ஜனவரி 9 முதல் பிப்ரவரி 5 வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க விழாவில், பிரபல இசை நட்சத்திரம் யோ யோ ஹனி சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். இதனை மகளிர் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்த தொடரில், ரசிகர்கள் அதிரடி ஆட்டங்களையும் மறக்க முடியாத தருணங்களையும் எதிர்பார்க்கின்றனர்.

















