திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட பொன்னோரி அடுத்த ஆரணி பகுதியில் பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரியில் அரசு அனுமதியோடு சவுடுமண் குவாரி இயங்கி வருகிறது. இந்த சவுடுமண் குவாரிக்கு 45 நாட்களுக்கு லாரிகள் மூலமாக 5, ஆயிரம் லோடு மட்டுமே சவுடுமண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பொதுபணித்துறை, கனிம வளத்துறை ஆதரவோடு சவுடு மண் அதிகளவில் லாரிகளில் நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 லோடுகள் வரை சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 45 நாட்களுக்கு எடுக்க வேண்டிய 5, ஆயிரம் லாரி லோடுகளை போலி ஆன்லைன் பில் மூலமாக 5-ந்தே நாட்களில் எடுத்து வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 3-அடி ஆழத்திற்கு மேல் சவுடுமண் அள்ளக்கூடாது என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை தன்வசம் படுத்திக்கொண்டு இந்த விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு 20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் ஆயிரம் கணக்கான டாராஸ் லாரிகள் குவாரியில் குவிந்து வருவதால் ஏரியில் போதிய இடம் இல்லாததால் திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு செல்லக்கூடிய சாலையில் லாரிகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பதோடு இந்த லாரிகளால் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்களும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதே போன்ற திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கி வரும் சவுடுமண் குவாரியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
