மும்பை : 2023-ம் ஆண்டு புனேவில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, தேசிய புலனாய்வு முகமை (NIA) வசம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் ஒரு கட்டமாக, இன்டர்போல் மற்றும் வெளிநாட்டு முகமைகள் உட்பட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள், சந்தேக நபர்கள் அப்துல்லா பையாஸ் ஷேக் என்ற டயாபர்வாலா மற்றும் டால்கா கானை கடந்த இரவு மும்பை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா வழியாக இந்தியா திரும்பிய இந்த இருவரும், விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையின் போது அதிகாரிகளிடம் சிக்கினர். தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மும்பை சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் எதிராக ஜாமீன் பெற முடியாத வகையில் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. மேலும், இவர்களை பிடித்து வழங்குவோருக்கு ரூ.3 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்திருந்தது.
தற்போது, இருவரும் புனே வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களாக கருதப்பட்டு, அவர்களிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.