மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வானகிரி சுனாமி குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தூண்டிக்காரன்(51). இவரை 2021-ஆம் ஆண்டு பிப்.19-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்(57), பாக்கியராஜ்(33) ஆகியோர் சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சுவற்றில் மோதி கொலை செய்தனர். இதுகுறித்து, தூண்டிக்காரன் மனைவி தமிழ்வாணி அளித்த புகாரின் பேரில், பூம்புகார் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ், பாக்யராஜ் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்மானித்து, அவர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் மாவட்ட அரசு வழக்குரைஞர் ராமசேயோன் ஆஜரானார்.

 
			

















