பாகிஸ்தான் மீது இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு மக்களின் பிரத்தியேக வரவேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உட்பட 140 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயரை பெற்றோர் வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் ஆர்.கே. ஷாஹி கூறியதாவது: “பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் நாட்டுப்பற்றுடன் ‘சிந்தூர்’ என்ற பெயரை சூட்டியுள்ளனர். இது சமூகத்தில் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் ஒரு தனிச்சிறப்பான சம்பவமாகும்” என தெரிவித்தார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் கொடுக்கும் வீரர்களுக்கான மரியாதையாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தைரிய செயலுக்கு மக்களின் உறுதியான ஆதரவாகவும் இந்த செயல் பார்க்கப்படுகிறது.