புதுடில்லி :
தேசிய உணர்வை எழுப்பிய வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு நினைவுத் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று வந்தே மாதரம் பாடலை எழுதியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பாடல் அவரது பிரபல நாவலான ஆனந்த மடம் நூலில் இடம்பெற்று, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்தி சின்னமாக மாறியது.
இதனை நினைவுகூரும் வகையில், மத்திய கலாசார அமைச்சகம் ஒரு ஆண்டுக் கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது. 2025 நவம்பர் 7 முதல் 2026 நவம்பர் 7 வரை, நாடு முழுவதும் இசை, கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதல் கட்டம் நவம்பர் 7 முதல் 14 வரை, இரண்டாம் கட்டம் 2026 ஜனவரி 19 முதல் 26 வரை (குடியரசு தினத்தையொட்டி), மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் 7 முதல் 15 வரை, இறுதி கட்டம் நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று டில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். விழாவின் போது வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பின்னர் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதாவது :
“நவம்பர் 7ம் தேதி நம் நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். வந்தே மாதரம் பாடல் தலைமுறைகள் முழுவதும் தேசபக்தி உணர்வை ஊட்டுகிறது. அதன் 150வது ஆண்டு நிறைவை நாம் பெருமையுடன் கொண்டாடுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.

















