திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கீழ மலையன்தெருவைச் சேர்ந்தவர் ஞானமுத்துபட்டர். இவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் கும்பகோணத்தில் உள்ள பாடசாலையில் பயின்று வருகிறார். மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.
பிரியா தனது கணவர் ஞானமுத்து இறந்த 10 நாட்களுக்கு பிறகு விஷேசங்களை முடித்து விட்டு திருநெல்வேலியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதற்குள் இருந்த தங்கம், வெள்ளி, வைரம் என மொத்தம் 107 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பிரியா குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பின்பக்க சுற்றுச்சுவர் வழியாக கொள்ளையர்கள் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.