ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி திமுக நிறுவப்பட்ட நாள், பெரியார் மற்றும் அண்ணாவின் பிறந்தநாள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு “முப்பெரும் விழா”வாக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இவ்வாண்டு விழா கரூரில் மாநில அளவில் நடைபெறுகிறது.
விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட முன்னோடிகள் 6 பேருக்கு விருதுகளை வழங்கி உரையாற்ற உள்ளார். கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். மேலும், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.
சுமார் இரண்டு லட்சம் பேரைத் தாங்கும் வகையில் பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200 அடி நீள மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காக ஒரு லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு மற்றும் மைசூருவிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் திறந்த வேனில் 800 மீட்டர் நீளச் சாலை வழியாக தொண்டர்களை சந்தித்து கையசைத்து செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வழக்கமான ரேம்ப்வுக்குப் பதிலாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விழா நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மத்திய மண்டல ஐஜி தலைமையில் 3 டிஐஜிக்கள், 12 எஸ்பிக்கள், 10 ஏடிஎஸ்பிக்கள், 31 டிஎஸ்பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2,900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த முப்பெரும் விழா, திமுகவின் முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
















