100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்பது, கிராமப்புறங்களில் வேலை தேடும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்யும் இந்திய அரசின் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மத்திய அரசு நீக்கியது. இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ தலைமையில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ராஜகுமார் கூறுகையில் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசால் 90 சதவீதம் நிதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி 90% நிதியை குறைத்து 60% நிதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றி 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு சீர்குலைப்பதாகவும் இதனைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று முன்னதாகவே மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக எம்எல்ஏ ராஜகுமார் தெரிவித்தார்.
