புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வேளாண் இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக சேர்ந்த 84 மாணவ மாணவியர், “வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள்” என்ற பாடத்திட்டத்தை இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் தலைமையில் பயின்று வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக, நாடு வளர்ச்சியை வேகமாக அடைய அரசு துறைகள் மட்டுமன்றி, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் என்பதால், காரைக்கால் காமராஜர் சாலை அருகே, இலக்கம் 73, மெயின் ரோடு, ராஜாதி நகரில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் நலனுக்காக முன்மாதிரியாக செயல்படும் சத்யா சிறப்பு பள்ளியில், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
அந்த சிறப்பு பள்ளித் திட்டத்தின் தலைவர் திரு. ஷேக் ஷெரிஃப், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை தொடங்குவது எப்படி, மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் என்ன, அதைத் தவிர்ப்பது எப்படி என்ற தலைமை உரையை ஆற்றினார்.
மனோதத்துவ நிபுணர் திரு. ராஜ்குமார், சிறப்பு கல்வி ஆசிரியர்கள் செல்வி கிஷோவுரி, திரு. கார்த்திகேயன், இயன் மருத்துவர் திரு. பாரதி, உதவி ஆசிரியர் செல்வி நாகம்மா மற்றும் உதவியாளர் திருமதி லதா ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து, அடுத்து சிறப்புரை ஆற்றிய பஜன்கோவா இணை பேராசிரியர் முனைவர் ஆனந்த்குமார் பேசுகையில், “மாணவ மாணவியர் இதுபோல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடங்கி சேவைகளும் செய்யலாம். சத்யா சிறப்பு பள்ளிக்கு கல்வி பயில வந்து, உபாதைகளை மீறி சாதித்துக் காட்டும் அசாதாரண மனநிலை மற்றும் உடலமைப்பு கொண்ட குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமியரை ஒப்பிட்டு நோக்கும்போது, நல்ல மனவளமும் உடல் ஆரோக்கியமும் பெற்ற வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் தீய பழக்கங்களை முற்றிலும் துறந்து, உள்ளமைந்துள்ள நற்பல திறன்களை உணர்ந்து, முழுமையாக வெளிக்கொணர்ந்து அரிய செயல்களால் உலகை வியக்கச் செய்ய வேண்டும்,” என்றார்.
மேலும், மிகவும் நலிவுற்று சமூகத்தின் விளிம்பில் தற்சார்பற்று வாழ போராடும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சமூக நீதி அடிப்படையில் போதிய நலத்திட்ட உதவிகளை, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மாணவ மாணவியர் உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பயிற்சியில் பங்கேற்ற பஜன்கோவா மாணவ, மாணவியர் தலா இருபது ரூபாய் பங்களித்து, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அந்த சிறப்பு பள்ளிக்கு நன்கொடையாக ரூபாய் இரண்டு ஆயிரம் ரொக்கத் தொகையை மாணவி சக்தி மற்றும் மாணவர் பிரியதர்ஷன் வழங்கினர்.
மாணவர்கள் மாதேஸ்வரன், பிரவீன்குமார், சதாசிவம், விக்னேஷ் மற்றும் மாணவியர் பார்கவி, ரீமா சென், லக்ஷயா, மஹிழ்நா கோவின் பல சந்தேகங்களை எழுப்பி, அவற்றைத் தொடர்ந்து விவாதங்களை நடத்தச் செய்து, தீர்மானங்கள் நிறைவேற உதவினர்.
மாணவர்கள் சாய் ராமகிருஷ்ணன் மற்றும் குகன், நிகழ்ச்சியின் விவாதங்கள் மற்றும் தரவுகளை ஆவணமாக்கி, பொது மக்களின் நலனுக்காக பகிர்ந்து உதவினர்.
முன்னதாக, மாணவி சிந்தியா சைமன் அனைவரையும் வரவேற்றார். மாணவி ‘அன்னிக்’ இறுதியில் நன்றியுரையாற்றினார்.
