விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திர பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகே அமைந்த நான்கு சென்ட் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஆறுமுகம் மற்றும் செந்தில் ஆகிய இருவர் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவ்விடத்தில் முந்தைய காலத்தில் முருகன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த கோவிலை இடித்து புதுப்பிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதே பகுதியில் உள்ள ஆறுமுகம் மற்றும் செந்தில் ஆகியோர், அரசு நிலத்தை தங்கள் சொந்த நிலமாக கூறி, வருவாய் துறையினரை கையாள்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இந்த நிலத்தை தனிப்பட்ட முறையில் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக மனு அளித்தனர்.
“உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், நாங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும்,” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
