மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் தரமற்ற வகையில் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் நேரில் ஆய்வு:-
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நடைமேடையில் டைல்ஸ் கற்கள் தரமற்ற முறையில் மெலிதாக போடப்பட்டதால் அடிக்கடி உடைந்து சேதமடைவதாகவும், பணிகள் தரமற்ற முறையில் செய்யப்படுவதாகவும், ரயில்வே கட்டுமானப் பிரிவு துறை அதிகாரிகள் கட்டுமான பணிகளை உரிய முறையில் ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும், நேற்றும் ரயில் நிலைய வாயில் மற்றும் முகப்பு வாயில் மேற்கூரையில் பொருத்தப்பட்ட 35 கிலோ எடை கொண்ட ஜி. ஆர்.சி சிமெண்ட் சீட்டுகள் நான்கு பெயர்ந்து விழுந்தது.
பொதுமக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். அம்ரித் பாரத் திட்டப் பணிகள் தரமானதாக நடைபெறுகிறதா என்று நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இரண்டு முறை சிமெண்ட் சீட்டுகள் பெயர்ந்து விழுந்த பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் நடைமேடைகளில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதி அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
சுகாதாரமற்ற முறையிலும், பாதுகாப்பற்ற முறையில் உள்ள இடங்களை சுட்டிக்காட்டி சரி செய்ய அறிவுறுத்தினார் அப்போது அவரை சந்தித்த ரயில் பயணிகள் சங்கத்தினர் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், நடைமேடையில் தரமற்ற முறையில் போடப்பட்ட டைல்ஸ் கற்களை அப்புறப்படுத்தி தரமான டைல்ஸ் கற்கள் போட வலியுறுத்தியும், தஞ்சாவூர்- மயிலாடுதுறை- விழுப்புரம் இரட்டை வழி பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும், திருச்சி தாம்பரம் இன்டர்சிட்டி ரயிலை தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த ஆய்வில் தலைமை திட்ட மேலாளர் சந்திரசேகர் தெற்கு திருச்சி கோட்ட முதுநிலை பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
















