கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்ததில் அதிலிருந்த 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் அதே பகுதியைச் சேர்ந்த ராமையன் மகன் சங்கர்(46) என்பவர் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வரும் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அருகாமையில் அப்துல் ரகுமான்(63)என்பவர் ஆயுர்வேத மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். அதற்குப் பக்கத்தில் ரெங்கநாதன் மகன் ரஞ்சித்(34)என்பவர் இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு அருகாமையில் உள்ள வீடுகளுக்கு மூவரும் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சங்கர் இருசக்கர வாகன உதிரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததை அங்கிருந்தவர்கள் அவருக்கு தெரிவித்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. மேற்கண்ட 3 கடைகளும் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இந்த தீ பத்தில் சங்கர் இருசக்கர வாகன கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மற்றும் ஹோண்டா ஆகிய 7இருசக்கர வாகனங்களும், காற்றடிக்கும் இயந்திரம் ஒன்று,பேட்டரி சார்ஜ் செய்யும் இயந்திரம் மற்றும் 40 டயர்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் எரிந்து நாசமாயின. அப்துல் ரகுமான் ஆயுர்வேதிக் மருந்து கடையில் இருந்த சுமார் 4, லட்சம் மதிப்பிலான அனைத்து வகையான மருந்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. ரஞ்சித் என்பவரின் கடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இனிப்பு பண்டங்களும் சேதம் அடைந்தன. அங்கு அபீப்முகமது என்பவரின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் இனோவா காரின் ஒரு பகுதி எரிந்து சேதம் அடைந்தது. மொத்தத்தில் இந்த மேற்கண்ட மூன்று கடைகளில் இருந்த ரூ30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது எரிந்து கொண்டிருந்த கடைப்பகுதியிலிருந்து இரண்டு மர்ம நபர்கள் வெளியே ஓடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.