மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற விவகாரத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் பேராசிரியர் முரளிதரன் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்கள், ஓய்வூதியர்கள், பொதுமக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
