நாகர்கோவில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனை தலைமை ஆசிரியர்மற்றும் சக ஆசிரியர்கள் மனரீதியாக துன்புறுத்தியதாக கூறி பெற்றோர் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனுக்கு அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 3 மாணவர்கள் தொடர்ந்து கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பிளஸ் 1 மாணவர் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிளஸ் 1 மாணவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிளஸ் 1 மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 மாணவர்களை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளது.இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற அந்த மாணவனை தலைமை ஆசிரியரும் சக ஆசிரியர்களும் மனரீதியாக புண்படுத்தியதாக கூறப்படுகிறது மேலும் தனது மகனை மருத்துவ பரிசோதனை செய்யப் போகிறோம் என ஒரு அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் தற்போது தனது மகனை இந்த பள்ளிக்கு வரக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறியதுடன் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருமாறு வற்புறுத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர் .தனது மகனுக்கு மன உளைச்சலை ஏற்ப்படுத்திய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மணிகண்டன் மற்றும் பாஜக கவுன்சிலர் சுனில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


