திருவண்ணாமலை அருகே தாய் கண்ணெதிரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸார் இருவரும் காவல்துறை பணியிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை வேட்டவலம் சாலையில் நிறுத்தி கடந்த 29-ம் தேதி சோதனையிட்ட திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர், தாய் கண்ணெதிரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீஸார் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களை காவல்துறை பணியிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, கடந்த 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.