மயிலாடுதுறை அருகே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். பயனாளிக்கு பொருட்கள் வழங்கும் போது எடை மெஷின் பழுதானதால் ரேஷன் பொருட்கள் எடை வைக்காமல் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வயது முதிர்ந்தோருக்கான வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் இணைந்து நடமாடும் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர் .
தொடர்ச்சியாக பயனாளியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவர்களிடம் கைரேகை பதிவு செய்து அவர்களுக்கு ரேஷன் பொருட்களை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.
இந்தத் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 493 ரேஷன் கடைகளின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டை இல்லத்திற்கு 325 நகரும் வாகனங்களைக் கொண்டு 19847 பயனாளிகள் பயன் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எடை மெஷின் பழுதானதால் ரேஷன் பொருட்கள் எடை வைக்காமல் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அறிந்த வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக அடுத்த பயனாளி வீட்டிற்கு செல்வதற்கு முன்பு எடை மெஷின் எடுத்து வந்து மாற்றி எடை வைத்து ரேஷன் பொருட்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி , வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
