தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சமாதியில் மனு கொடுக்கும் போராட்டமும், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சங்க நிர்வாகிகளை வீட்டில் புகுந்து காவல்துறை கைது செய்துள்ளதை கண்டித்தும், போராட்டம் நடத்தி வரும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் மாநில நிர்வாகிகளை அழைத்து பேச வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் கைது நடவடிக்கையை கண்டித்தும் கோரிக்கைக்காக போராட்டம் நடத்திவரும் மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேச வலியுறுத்தியும் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















