சீர்காழி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தியில் அரசு டாஸ்மார்க் கடை கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்த நாள் முதல் தினமும் குடியிருப்பு வாசிகளுக்கும் மது பிரியர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தினமும் மதுக்கடைக்கு செல்லும் மது பிரியர்களால் குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கன்னியாகுடி, திருப்புங்கூர் ஆகிய கிராமங்களில் சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனுக்களை கொடுத்து வந்தனர். ஆனால் இது நாள் வரை இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றாததால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மதுபான கடையால் அடிக்கடி விபத்துகளும் சண்டைகளும் ஏற்படுவதால் நாளுக்கு நாள் குடியிருப்பு வாசிகள் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாக வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடை முன்பு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .ஆர்ப்பாட்டத்தின் போது கன்னியாகுடி கிராமத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் காவல் உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய போராட்டத்தை விளக்கிக் கொண்டனர்.

Exit mobile version