சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பூடானில் இருந்து சட்டவிரோதமாக, சொகுசு கார்களை வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த மாதம் 23-ந்தேதி கொச்சியில் உள்ள, துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது, சொகுசு காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கார் வாங்கியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு, கூறியிருந்தனர்.
ஆனால் இந்த கார்களை, தாம் சட்டப்படி வாங்கி உள்ளதாகவும், அதனை திருப்பித் தர வேண்டும் என்றுகோரி, கேரளா உயர்நீதிமன்றத்தில், துல்கர் சல்மான் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதனிடையே, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் துல்கர்சல்மான், பிரித்விராஜ் ஆகியோருக்கு நெருக்கமான 17 இடங்களில், இன்று காலை முதலே, அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அபிராமபுரத்தில் இருக்கும் துல்கர் சல்மான் இல்லத்தில், இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துல்கர் சல்மானின் சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும், அவர்கள் சோதனை நடத்துகின்றனர்.
சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.