கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாய விலை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி உபரி நீர் சூழ்ந்து பாதிப்பு.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வருகின்ற நீர் முழுதும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களாக 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீர் மேலனைக்கு வெளியேற்றப்பட்டு கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்ளிடம் ஆற்றில் திறந்த விடப்பட்டுள்ள உபரிநீர் முழுவதும் சீர்காழி அருகே பழையார் கடலில் சென்று கலக்கிறது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்டம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உபநிர் உட்புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே ஆற்றின் திட்டுப்பகுதியில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் ஆகிய மூன்று கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து அங்கு உள்ள ஒரு சில குடியிருப்புகளை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பணப் பயிர்களான வாழை, மரவள்ளிக்கிழங்கு, கத்திரி, வெண்டை, உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கீழ் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டால் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

