மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 96 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர்கள் புகையான் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் கூறுகையில், கடந்த பத்து தினங்களாக வானம் மேகமூட்டுத்துடன் காணப்பட்டு வருகிறத. இதனால் சூரிய ஒளிச் சக்தி இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர்களை புகையான் பூச்சி கொஞ்சம் கொஞ்சமாக தாக்கி வருகிறது, நோய் தாக்கினால் நெல்லுக்கு தேவையான சத்து பொருள்கள் நெல் மணிக்கு கிடைக்காது. நெல் பதராக மாறிவிடும். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 40,000 செலவு செய்துள்ளோம், ஏற்கனவே ஜனவரியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை இன்னும் வந்து சேரவில்லை, வங்கியில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி செலவு செய்த நெற்பயிர்கள் தற்போது புகையான் தாக்குதலால் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது, அதனைத் தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் பருவம் தவறிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது, இதனால் விவசாயிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றோம், உடனே தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாவட்டத்தில் மயிலாடுதுறை மணல்மேடு, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் செம்பனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புகையான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை அதை உடனே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.