பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி சேமங்கலம் பகுதி விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2024-25 ஆம் ஆண்டு சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த கன மழையில் பாதிக்கப்பட்டது. கணக்கெடுப்பு செய்து இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரூபாய் 10 கோடிக்கு மேல் நிவாரணத்தொகை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் விவசாயிகளுக்கு இதுவரை பணம் வந்து சேரவில்லை. இந்நிலையில் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேமங்கலம் கிராம விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இதுவரை தங்கள் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கவில்லை என்றும், குருவைப் பருவம் நெல் அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் உளுந்து பயிர் முற்றிலும் பருவம் தவறி பெய்த மழையில் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தும் பயனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக தங்கள் பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















