கஞ்சாநகரம் கிராமத்தில் அரசுப்பேருந்து நின்று செல்லாததைக் கண்டித்து கிராமமக்கள் பேருந்தை மறித்து போராட்டம்:- பூம்புகார்-மயிலாடுதுறை வழிபத்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பூம்புகார் பிரதான சாலையில் கஞ்சாநகரம் கிராமத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய நேரத்தில் இயக்கப்படும் 21ஏ அரசுப்பேருந்து நின்று செல்வதில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். பூம்புகாரில் இருந்து இப்பேருந்து ஏற்கெனவே அதிகளவில் மக்களை ஏற்றிக்கொண்டு வருவதால், பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர்கள் சிலர் ஓடிச்சென்று பேருந்தில் ஏறி படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த 21ஏ அரசுப்பேருந்தை கஞ்சாநகரம் பிரதான சாலையில் மறித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மாணவர்களை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பேருந்தை நிறுத்தாமல் செல்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஓடிச்சென்று ஏறி, சில சமயங்களில் விபத்துக்கு உள்ளாவதால், அதனை தவிர்க்க போக்குவரத்து அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மயிலாடுதுறை-பூம்புகார் மார்க்கத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
