மயிலாடுதுறையில் பூர்ணபுஜங்காசனம், சிறுவிக்ரமாசனம், விருச்சிகாசனம், சக்கராசனம் ஆகிய கடினமான யோகசனங்களில் மாணவ-மாணவிகள் உலக சாதனை:-
மயிலாடுதுறையில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட யோகா அணி தேர்வு மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில், பொதுப்பிரிவில் 650 மாணவர்கள், சிறப்பு பிரிவில் 100 மாணவர்கள் என்று மொத்தம் 750 பேர் கலந்து கொண்டனர். சிறப்புப்பிரிவில் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டிக்கு 15 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில், மாணவர் ஸ்ரீவர்ஷன் 35 நிமிடம் 15 வினாடிகள் பூர்ணபுஜங்காசனமும், மாணவி தானியாஸ்ரீ 6.13 நிமிடங்கள் சிறுவிக்ரமாசனமும், மாணவர் விவின்ஆன்ட்ரூ 13.2 நிமிடங்கள் விருச்சிகாசனமும், மாணவி சுகீஸ்வரி 11.04 நிமிடங்கள் சக்கராசனமும் செய்து அசத்தினர். இவர்களது சாதனையை அகில இந்திய தற்காப்பு கலைஞர்கள் சங்கம் உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இதில், நாகை மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பிரசன்னதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் யோகா நிகழ்ச்சிகளை பெற்றோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.













