சென்னை:
இன்றைய சமுதாயத்திலும் நிறப்பாகுபாடு பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளின் முக்கிய காரணமாகவே உள்ளது. தோற்றம் மற்றும் நிறம் அடிப்படையில் பல இளம் பெண்கள் இன்னும் பாகுபாட்டிற்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். இதனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது ஆந்திர மாநிலத்தில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம்.
ஆந்திராவின் வினுகொண்டா மண்டலத்தில் உள்ள நடுகட்டா பகுதியில் வசிக்கும் கோபிலட்சுமி என்ற இளம்பெண், கடந்த ஜூன் மாதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது கோபிலட்சுமியின் குடும்பத்தினர் 25 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.12 லட்சம் பணம் வழங்கியதாக கூறப்படுகிறது.
திருமணத்தின் ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக நடந்தது. ஆனால், மூன்று மாதங்களுக்குள் கோபிலட்சுமி வாழ்க்கை நரகமாக மாறியது. அவரின் கருப்பு நிறத்தையே மாமியார், மாமனார், கணவர் மூவரும் கேலி செய்து பாகுபாடு காட்ட ஆரம்பித்தனர். “மருமகள் கருப்பா இருக்கிறாளே, கூடுதல் வரதட்சணை வேண்டும்” எனக் கோரியதோடு, அடிக்கடி அவமதிப்பும் துன்புறுத்தலுமாக நடந்துகொண்டனர்.
ஒரு கட்டத்தில், மாமியார் கோபிலட்சுமியை வீட்டிலிருந்து நேரடியாக வெளியே துரத்தியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த கோபிலட்சுமி, கணவரின் வீட்டின் முன்பாகவே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்தார். ஆனால், அதைக் கண்டு பயந்த கணவர் மற்றும் அவரது பெற்றோர் வீடு பூட்டிக்கொண்டு வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
பின்னர், கோபிலட்சுமி தன்னிடம் ஏற்பட்ட அவலத்தை வெளிக்கொண்டு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் கோபிலட்சுமியின் கணவர், மாமியார், மாமனார் ஆகிய மூவர்மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிலட்சுமியின் தைரியம் மற்றும் மன உறுதி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. “கருப்பு நிறம் குற்றமல்ல, மனம் தான் முக்கியம்” என நெட்டிசன்கள் பெரிதும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

















