சென்னை : ஐஐடி வளாகத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னை : சென்னை ஐஐடி வளாகத்தில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் மீது பாலியல் தொல்லை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடி வளாகத்தில் மாணவியாகக் கல்வி பயிலும் அந்த இளம்பெண் நேற்று (புதன்) இரவு தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, ரோஷன் குமார் (22) என்ற இளைஞர், திடீரென கையில் கட்டையை ஏந்தி அவரை மிரட்டி, முடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு ஓடி, அருகிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களிடம் இந்த விவரத்தை தெரிவித்தார். பின்னர், அவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனே விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றத்தில் ஈடுபட்டவரை தேடி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், ரோஷன் குமார் ஐஐடி வளாகத்திலுள்ள Mumbai Chaat என்ற உணவகத்தில் வேலை பார்த்து வந்ததும், சம்பவத்தன்று அவ்விடத்தில் வேலைக்கு வராமலிருந்ததும் தெரியவந்தது.

காவல்துறையினர் தற்போது ரோஷன் குமாரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version