திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்தில் 120 பவுன் நகை, ரூ.25 லட்சம் பணம் மற்றும் ஒரு சொகுசு கார் உள்ளிட்டவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு, பிரீத்தியின் பூர்வீக சொத்து விற்பனையில் கிடைக்கும் ரூ.50 லட்சத்தை தரும்படி அவரது கணவர் மற்றும் மாமியாரின் குடும்பத்தினர் தொடர்ந்து மன அழுத்தம் கொடுத்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான பிரீத்தி, தாயார் வீட்டில் தங்கியிருந்தார். இன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பீதி ஏற்படுத்தியுள்ளது.

திருமணமானதிலிருந்து 10 மாதங்களே ஆன நிலையில் இந்த தற்கொலை சம்பவம் நடந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் வருகை புரிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில், பிரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சதீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னர், திருப்பூர் அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா என்பரும் வரதட்சணை விவகாரத்தில் உயிரிழந்ததைக் கூறும் நிலையில், அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version