உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில், 21 வயது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத இளம்பெண்ணை, நான்கு முதல் ஐந்து பைக்குகளில் வந்த கும்பல் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
போலீஸ் தகவலின்படி, கொத்வாலி திஹாத் காவல் நிலைய வரம்பில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், தனது மாமா வீட்டிற்குச் சென்றிருந்தார். திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், தனது வீட்டிற்கு செல்ல புறப்பட்டார். அந்த நேரத்தில், தனியாக நடந்து சென்ற அவரை கவனித்த கும்பல், “லிப்ட் தருகிறோம்” எனக் கூறி வழிமறித்தது. பின்னர், ஆபாச சைகைகள் மூலம் அச்சுறுத்தி, பைக்கில் கடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
வாய் பேச முடியாததால் உதவிக்கு அழைக்க முடியாமல் தவித்த இளம்பெண், தப்பிக்க ஓடினார். ஆனால் குற்றவாளிகள் அவரைப் பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிக்குள் இழுத்துச் சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவரை அங்கேயே விட்டு தப்பிச் சென்றனர்.
நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேடுதல் நடவடிக்கையில், வயலில் மயக்க நிலையில் இருந்த இளம்பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சில காட்சிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.