சென்னை: பிரபல நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சில காலமாக மஞ்சள் காமாலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலம் மீண்டு மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துவந்தார். ஆனால் நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, இரவு 8.30 மணியளவில் அவர் காலமானார்.
கமல்ஹாசன் உருக்கம்
ரோபோ சங்கர் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த கமல்ஹாசன், “ரோபோ என்பது பெயர் மட்டுமே. என் அகராதியில் அவர் மனிதன், எனவே என் தம்பி. போதலால் மட்டும் என்னை விட்டு நீங்கி விடுவாயா நீ ? உன் வேலை நீ போனாய், என் வேலை தங்கிவிட்டேன். நாளை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
திரை உலகின் இரங்கல்கள்
டி. ராஜேந்தர் – “ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த ரோபோ சங்கரின் உயிரை காலன் இவ்வளவு விரைவில் பறித்துச் சென்றது புரியவில்லை. ஒரு சிறந்த திறமையாளர் மிக சீக்கிரம் பிரிந்துவிட்டார்” என தெரிவித்தார்.
கார்த்தி – “சிறந்த நடிகரை இழந்துவிட்டோம்” என சோகத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் – “சமீபத்தில் அவரது குடும்பத்தினரை சந்தித்த தருணம் நினைவில் உள்ளது. தந்தையின் திடீர் மறைவால் வாடும் மகளுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவு வெளியிட்டுள்ளார்.
கருணாஸ் – “ரோபோ சங்கரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. திரை கலைஞர்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
