மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விஜயைச் சந்தித்தது குறித்து பேசிய சீமான், “விஜய் தம்பி வரலாறு திரும்புகிறது என்கிறார். ஆனால் அந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்,” எனக் கூறினார்.
அவர் மேலும், “ஒப்பனையை அழித்த உடனே அரியணை கேட்கும் நீங்கள், நடிக்கும்போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு; நடிப்பை நிறுத்தினால் நாட்டைக் கொடுப்போம் ஆள்வதற்கு எனும் நிலைமையே இப்போது உள்ளது. இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. அரசியல் என்பது வாழ்வியல், அதற்கான நெறிகளை முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்,” என கடுமையாக சாடினார்.
அதே சமயம், “தமிழகத்தில் கல்வி வணிகமாக மாறிவிட்டது. கலைஞர்களை நாம் போற்றவேண்டும், ஆனால் அவர்கள் நடித்தாலே ஆட்சி செய்யலாம் என்ற எண்ணம் வளர்கிறது என்பது சமூகத்தின் பெரிய துயரம்,” எனவும் சீமான் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மருது சிலைக்கு மாலை அணிவதற்காக வந்த நிலையில், காவல்துறையினர் சீமானிடம் பேட்டியை முடிக்குமாறு கேட்டனர். இதனால் சீமான் சில நொடிகள் கோபம் அடைந்தார். “ஒரு நிமிடம் பொறுங்கள், முடித்து விடுகிறேன்,” என கூறிய அவர், விரைவாக பேட்டியை முடித்து சிவகங்கை நோக்கி புறப்பட்டார்.
 
			















