மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு; மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் வசித்த வீட்டில் கடந்த சில நாட்களாக மின்கசிவு இருந்த நிலையில் புகார் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் ஸ்விட்ச் போர்டில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியதில் தினேஷ் தூக்கி வீசப்பட்டு மண்டையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்வாரிய துறையினர் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு நேரிட்டு இருக்காது என குற்றம் சாட்டி மின்சார துறையை கண்டித்தும், உயிரிழந்த தினேஷின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி தினேஷின் உறவினர்கள் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை அருகில் மயிலாடுதுறை கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
